வட்டுக்கோட்டை வாள்வெட்டு – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் மற்றும் மனைவியை பொன்னாலை பகுதியில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.

கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது.

பின்னர் கணவனை கடத்தி சென்றவர்கள் அவரை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக வீசி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …