2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு துறைகளின் தொழிற்சங்கங்கள் முக்கிய பல கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளன.
கல்வித்துறை
கல்வித் துறை சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் பாதீட்டில் தங்களது வேதன நிலுவையில் எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பகுதியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளவதற்கான தீர்வுகளை ஆசிரியர் மற்றும் அதிபர்களின் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கீடு செய்வது என்ற போராட்ட முழக்கத்தின் அடிப்படையில், தற்போதைய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் இந்த உறுதிமொழி குறித்த சரியான அறிவிப்பை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்களின் விலையை குறைப்பது குறித்து ஆட்சிக்கு வரும்போது வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மருத்துவத் துறை
இதனிடையே சுகாதாரத் துறை தொடர்பான சில பாதீட்டு கோரிக்கைகள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அதிக வரி விதிப்புக் கொள்கை தொடர்பாகக் கடும் பிரச்சினை நிலவுவதாகவும், தொழில் வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள் மாதாந்த மற்றும் வருடாந்த அடிப்படையில் மிகப் பெரிய வரித் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.
இந்த பாதீட்டில், தொழில் வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்களுக்காக, சாத்தியமான மற்றும் நியாயமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வங்கி மற்றும் நிதியியல் துறை
தேசிய வீட்டு வசதி வங்கியை உருவாக்குவதற்காக, இரண்டு வங்கிகளான தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அரச ஈட்டு, முதலீட்டு வங்கி (SMIB) ஆகியவற்றை ஒன்றிணைக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அரச வங்கிச் சேவையாளர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளர்.
அத்துடன். பிரதேச அபிவிருத்தி வங்கியை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தேசிய அபிவிருத்தி வங்கியையும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையிலிருந்து சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை சில வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், ரொக்கப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்காமல் இருப்பதன் மூலம் டிஜிட்டல் கல்வியறிவை மேலும் மேம்படுத்த விரிவான திட்டம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை
முச்சக்கரவண்டி வாங்குவதற்கான நிதி வசதிகள் தற்போது பெட்ரோலில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகளுக்கும் 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
எனவே, இந்த நிதி வசதியை வர்த்தக வாகனங்களுக்கு வழங்கப்படும் அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதியிடம் தாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தொடருந்து போக்குவரத்துத் துறை தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தொடருந்து நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத தர்மதாச தெரிவித்தார்.
தொடருந்து பெட்டிகள், இயந்திரங்கள் ஆகியவற்றின் பற்றாக்குறையால், பல தினசரி சேவைகள் இரத்து செய்யப்படுகிறது
சரக்கு போக்குவரத்துக்கு தொடருந்தை பயன்படுத்துவதிலும் கடுமையான சிக்கல்கள் நிலவுகின்றன.
இந்த பாதீட்டில், இந்தச் சிக்கல்களைக் களைவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கவும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கவும் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை
கடந்த பாதீட்டில் வழங்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான வேதன உயர்வு அல்லது மேலதிக நேரக் கொடுப்பனவு சலுகை அஞ்சல் ஊழியர்களிடமிருந்து நிர்வாகத்தால் பறிக்கப்பட்டு, ஒரு மாற்று முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாதீட்டிலாவது இந்தச் சிக்கலை சரியான முறையில் திருத்த வேண்டும் என்று அஞ்சல்துறை தொழிற்சங்கங்கள் கோருகின்றன.
இலங்கையின் சர்வதேச அஞ்சல் சேவை இன்று மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டால், இந்த துறையை அபிவிருத்தி அடைந்ததாக மாற்றலாம். இல்லையெனில், அது அரச திறைசேரிக்கு மேலும் சுமையாக மாறும் என்று எச்சரித்துள்ளனர்.
வாகன இறக்குமதி
வாகனங்களுக்கான வரிகளை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
மேலும் வரி அதிகரித்தால், சிறிய அல்ட்டோ சிற்றூந்து முதல் பெரிய வாகனங்கள் வரை அவற்றின் விலை குறைந்தது 115% முதல் 125% வரை அதிகரிக்கும்.
இது வாகனங்களை ஒருவரால் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்வை ஏற்படுத்தும் என்றும் இதனால் வரி அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.