மாணவர்களுக்கான விசேட செய்தி

இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து மாணவர்களுக்குத் துல்லியமான மற்றும் திறன்மிக்க தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக ‘1966’ என்ற துரித இலக்கம் (Hotline) இன்று (6) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள நிபுணத பியச வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவின் தலைமையில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ‘1966’ துரித இலக்கத்தின் மூலம், மாணவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தொழிற்கல்வி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் மேம்பட்ட சேவைக்காக, அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட, தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு கேள்விகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல் கொண்ட ஒரு சாட்போட்டுடனும் (Chatbot) பயனர்கள் உரையாடலாம்.

மேலும் குறித்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய, புதிய பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் மாணவர்கள் அடிப்படைத் தொழிற்பயிற்சியைத் தொடங்கும் இந்த நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தை வளரும் கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நாளைக்கான தொழில்சந்தையில் மாணவர்கள் வெற்றிகரமாக நுழைவதற்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை உருவாக்க, தொழிற்கல்வி கட்டமைப்பைச் சூழ்நிலைக்கு ஏற்ப சீர்திருத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.