டயனா கமகேவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

0
10

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த உத்தரவின் பிரதியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கும், தேசிய புலனாய்வு பிரிவுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதவான் திலின கமகே அறிவுறுத்தியுள்ளார்.

டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் நேற்று ( 08 ) அறிவித்தது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டிருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்கக் கோரி குறித்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.