காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றினால் கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதன்போது, அவரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, தேசபந்து தென்னகோன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும்போது அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
எனினும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், இந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்ததுடன், சந்தேக நபர் இந்த நீதிமன்றத்தைப் புறக்கணித்து 20 நாட்கள் தலைமறைவாகியிருந்தபோது விசேட பாதுகாப்பிலிருந்தாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன்போது, மாத்தறை நீதவான் அருண புத்ததாச, நீதிமன்றத்திற்கு வரும் அனைவருக்கும் நாட்டின் பொதுச் சட்டம் பொருந்தும் எனவும், காவல்துறைமா அதிபருக்கு விசேட பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை எனவும், அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டால் அது பொதுமக்களுக்குப் பாதகமாக இருக்கும் எனவும் கூறினார்.
எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவுகளை மீறிச் சந்தேக நபரான காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து மகிழுந்தில் வெளியேறியதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது.
அதன்படி, காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news
