பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி

0
3

புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெரித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அம்மாநில திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவின் மாநில முன்னாள் தலைவரும் மகளிருமான டாக்டர் தமிழிசை துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெரித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படிங்க: உடனே அரசாணை வெளியிடனும் – சீமான்

இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, பெண்குழந்தைகள் நலம் என மேடை தோறும் பொய்மூட்டைகளை அவிழ்த்து கொக்கரித்து வரும் பாஜக கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்தில், அதுவும் மூச்சு முன்னூறு முறை பாஜகவில் பெண்ணுரிமை கூவும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை ஆளுநராக உள்ள மாநிலத்தில், உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு அவலம் அதுவும் பெண் சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது.

2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். இதுதான் பாஜகவினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா…? என கேட்கிறேன்.

அத்துடன், உலகத்தையே பாஜக ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று புளுகிக் கொண்டிருக்கும் பாஜக கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மைதான்.

ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, பாஜக ஆளும் புதுச்சேரி மாநிலத்தின் பக்கம் திரும்பி காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

புதுச்சேரி பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இந்திய பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் பிரதமர் மோடி அவர்கள் துவக்கிய “பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ” திட்டத்தை துவக்கினார்.

ஆனால் இன்று பாஜக ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் – மனிதாபிமானமற்ற கொலை.

இதையும் படிங்க: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: தமிழிசை

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித்தனமான கொலையையும்- பெண்களை பாதுகாக்கத் தவறிய பாஜக ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங் கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.


திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்