கச்சத்தீவை மீட்போம் – அண்ணாமலை சூளுரை

0
17

“கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தை கொண்டுவருவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது;

கச்சத்தீவு வேண்டும் என்பதே எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. அதன் பிறகு இதற்கான ஒவ்வொரு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறோம். கச்சத்தீவை மீட்பதற்கான முக்கிய நோக்கம், அப்போதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

இலங்கை அரசிடம் பேசி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி பெறுவோமா அல்லது கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்த அனுமதி பெறுவோமா அல்லது கச்சத்தீவையே திரும்ப கேட்போமா என்பது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆலோசித்து வந்தோம். கச்சத்தீவு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். அறிவியல் பூர்வமாக, சட்ட ரீதியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் உங்களிடம் தெரிவிக்கிறேன். கச்சத்தீவை மீட்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காதவர்கள், தற்போது என் மீது பாய்வது என்ன நியாயம்?