தொலைபேசியில் உரையாடிய முக்கிய தலைவர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதியை சீனாவுக்கு அழைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று சீன ஜனாதிபதி அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் யுக்ரைன், அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இதன் போது விவாதித்ததாக கூறப்படுகிறது.

வரி விதிப்பு காரணமாக அமெரிக்கா- சீனா இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தென்கொரியாவில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இதன்போது, இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

தைவான் குறித்து ஜப்பான் கருத்து தெரிவித்ததால் சீனா- ஜப்பான் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் தைவான் குறித்து டொனால்ட் ட்ரம்ப் எதுவும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது என சமூக வலைத்தளத்தில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.