அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகத் தலையிட்டு உயிர் இழப்புகளைத் தடுக்கவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை குறித்து ஆராய, இன்று (27) முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டறிய வேண்டும் என்றும், மாவட்ட மற்றும் பிரதேச குழுக்களைக் கூட்டி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரணம் வழங்கச் செல்வதற்கு பாதீட்டு விவாதங்கள் தடையாக இருப்பதால், இது குறித்து இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் நெடுஞ்சாலை கட்டமைப்பின் பாதுகாப்பு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.