டிட்வா புயல் எதிரொலி.. சென்னையில் விமான கட்டணம் 6 மடங்கு உயர்வு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்ரு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களின் கட்டணம் உயர்ந்துள்ளது..

சென்னை – மதுரை இடையேயான விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,129-இல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது.. சென்னை – திருச்சி இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,129-இல் இருந்து ரூ.55,626 வரை உயர்ந்துள்ளது. சென்னை – கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.4,351-இல் இருந்து ரூ.24,134க்கு வரை உயர்ந்துள்ளது.. விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..