மத்திய மாகாணத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சில கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இது கொலை. தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது. பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என்று அரசாங்கம் அச்சமடைகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் இன்று வெளிநடப்பு செய்வதாக அறிவித்துள்ளார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியாகிய நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம். வடக்கு கிழக்கு உட்பட ஒட்டுமொத்த பகுதிகளிலும் இலட்சக்கணக்கானோர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் அனர்த்த நிவாரணம் பற்றி எதிர்க்கட்சியினர் அனைவரும் ஓரணியாக இருந்து பேசுவதற்கு தீர்மானித்திருந்தோம்.
மக்கள் பிரதிநிதிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்து பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டுள்ளார்கள்.மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு எதிர்பார்த்துள்ளார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியாகிய நாங்கள் எதிரணியாக செயற்படுகிறோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமுள்ளன. மத்திய அரசாங்கத்தின் செயற்திட்டங்களை அமுல்படுத்த எமது உள்ளுராட்சிமன்றங்களும் பங்களிக்க வேண்டும்.
மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு மேலதிகமாக நேரம் ஒதுக்குமாறே கோரியிருந்தோம்.அதற்கு அரசாங்கம் இணங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பின்னர் விவாதமில்லாமல் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தீர்மானித்திருந்தோம்.அதற்கும் அரசாங்கம் இணங்கவில்லை.
மத்திய மாகாணத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சில கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இது கொலை தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது.இன்றைய (நேற்று) அமர்வில் எதிர்க்கட்சிக்கு 2 மணித்தியாலம் ஒதுக்கப்பட்டால் எமது கட்சிக்கு 5 நிமிடங்களே கிடைக்கும். 8 உறுப்பினர்கள் உள்ளோம். எவ்வாறு எமது மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது.
பேசுவதற்கு இடமளித்தால் அரசாங்கத்தின் போலியான தன்மை வெளிப்படும் என்று ஆளும் தரப்பு அச்சமடைகிறது.ஆகவே அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.





