பிக் பாஸ் – 9 நிகழ்ச்சிக்கு மீண்டும் துஷார் வந்த நிலையில், ஆரோராவுடன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, சக போட்டியாளர்கள் காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்தினர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 15 வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் இந்த சீசன் நிறைவு பெறுகிறது.
இதனிடையே, பாடகர் கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். நேற்றைய நிகழ்ச்சியில் சான்ட்ரா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது வாரமான இறுதி வாரத்துக்கு திவ்யா கணேஷ், சபரிநாதன், அரோரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நால்வர் தேர்வாகியுள்ளனர்.
கடந்த வாரம் முதலே பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த, இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். வியானா, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி, அப்சரா, கெமி, ரம்யா உள்ளிட்டோர் வந்தனர்.
இதனிடையே, இன்று(ஜன. 12) அமித் பார்கவ், துஷார் ஆகியோர் வந்துள்ளனர். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
துஷார் வெளியேற்றத்துக்கு அரோராதான் காரணம் என்று சக போட்டியாளர்கள் விமர்சித்து வந்தனர். இதனால் துஷார் வருகை முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று துஷார் மீண்டும் வந்த நிலையில், அரோரா – துஷார் இருவரும் தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர். இதைப் பார்த்த போட்டியாளர்கள் முதல்வன் படத்தில் இடம்பெற்ற காதல் பாடலான குறுக்கு சிறுத்தவளே பாடலைப் பாடி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
அப்போது, துஷார் அரோராவிடம், “என்னுடைய வெளியேற்றத்துக்கு நீ காரணம் கிடையாது, யார் பெயர் வைத்தும் நீ முன்னே வரவில்லை. நன்றாக விளையாடு” என்று தெரிவித்து உற்சாகப்படுத்திய இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.





