பிக் பாஸ் கார் டாஸ்க்கில் சான்ட்ராவை மிதித்து, ஆபாசமாக பேசிய கம்ருதீன்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9, தற்போது 90 நாட்களை நெருங்கி, விளையாட்டைக் காட்டிலும் வாக்குவாதம், மோதல், சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வீட்டுக்குள் நுழைந்த பல போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி வெளியேற, தற்போது மீதமுள்ள சிலரிடையே வெற்றிக்கான போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சீசன் முழுக்க, பின்னால் பேசல்கள், கத்தல்-கூச்சல்கள் என ரசிகர்களை “இது பிக் பாஸ் வீடா, போர்க்களமா?” என்று கேட்க வைத்த சம்பவங்கள் ஏராளம். அந்த வரிசையில் தற்போது Ticket To Finale டாஸ்க் பெயரில் நடந்த சம்பவம், இந்த சீசனின் மிகப் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

Ticket To Finale… ஆனால் டிக்கெட் கிடைத்தது சர்ச்சைக்கே! பிக் பாஸ் வீட்டில் தற்போது விஜே பார்வதி, கம்ருதீன், விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், திவ்யா கணேஷ், சாண்ட்ரா, சுபிக்‌ஷா, சபரி, அரோரா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கிடையே தொடங்கிய Ticket To Finale டாஸ்க், போட்டியை கடுமையாக்கியது உண்மைதான். ஆனால், அந்த கடுமை விளையாட்டு எல்லையைத் தாண்டி சென்றது என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய குற்றச்சாட்டு.

இந்த டாஸ்க்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற கார் டாஸ்க், பார்க்கும் ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போட்டியில் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக, போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி, இழுத்து, மோதிக்கொண்ட காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

கார் டாஸ்க்கா? கிக் பாக்ஸிங்கா?
அந்த நேரத்தில், காருக்குள் அமர்ந்திருந்த சாண்ட்ராவை விஜே பார்வதி, கம்ருதீன் எட்டி உதைத்த காட்சி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, கம்ருதீன் மோசமான வார்த்தைகளை பேசியதும் பார்வையாளர்களை மேலும் கொதிக்க வைத்துள்ளது.

“இது பிக் பாஸ் டாஸ்க்கா, WWE போட்டியா? விளையாட சொன்னா… அடிக்கிறாங்களே?” என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளையாட்டு என்ற பெயரில் ஒரு பெண் போட்டியாளரை அடித்து, மிதித்து, கீழே தள்ளுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதே பொதுவான விமர்சனமாக உள்ளது. வெற்றிக்காக எல்லாம் சரியா? டிக்கெட்டு ஃபைனாலே… அடித்தால்தான் கிடைக்குமா? என்று ரசிகர்கள் பிக் பாஸ் குழுவையும் கடுமையாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

பிரஜனின் ஆவேசம்
இந்த சர்ச்சைக்குப் பிறகு, சாண்ட்ராவின் கணவரும், பிக் பாஸ் 9-ன் முன்னாள் போட்டியாளருமான பிரஜன், தனது ஆவேசத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அவரது கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது, “நான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறேன். அப்படி நான் உள்ளே போகும் போது கம்ருதீன் வீட்டில் இருந்தால், அது அவருக்கு கெட்ட நேரம். இல்லாவிட்டால் நல்ல நேரம். இது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.”

இந்த கருத்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. சிலர் பிரஜனின் கோபத்தை நியாயப்படுத்தினாலும், மற்றொரு தரப்பு, வீட்டுக்குள் நடந்த தவறை கண்டிக்க வேண்டும்… ஆனால் அதற்கு மேலாக இன்னொரு மோதல் தேவையா?”
என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருபுறம் பிக் பாஸ் நிகழ்ச்சி TRP-க்காக எல்லாவற்றையும் அனுமதிக்கிறதா? மற்றொரு புறம் போட்டியாளர்கள் வெற்றிக்காக மனிதநேயத்தை மறக்கிறார்களா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. சாண்ட்ராவை விஜே பார்வதியும், கம்ருதீனும் தாக்கிய விதம், விளையாட்டு அல்ல…வெளிப்படையான தவறு என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிக் பாஸ் என்ன நடவடிக்கை எடுக்கும்? வெறும் வார்த்தை எச்சரிக்கையோடு முடிவடையுமா? அல்லது கடுமையான தீர்ப்பு வருமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.