உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு : சஜித்

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகள், அவர்கள் அனுபவிக்கும் கஸ்டங்களை நிவாரணங்கள் மூலம் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாரிய சவால்களை முகம் கொடுக்கும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியாக தாங்கள். தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், இன, மத, பேதம், அரசியல் என்ற அனைத்தையும் புறந்தள்ளி, மக்கள் எதிர்பார்க்கும் சேவையைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய முக்கிய தேவைகளாக, பதிலளித்தல், நிவாரணம் வழங்குதல், புனர்நிர்மாண செயற்பாடு, இழந்ததை மீளப் பெறல், மீண்டும் ஸ்தாபித்தல் மற்றும் மீண்டும் மறுசீரமைப்பு செய்தல் போன்றன முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

எனவே,பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

உயிர்கள், சொத்துக்கள், வாழ்வாதாரம், சுயதொழில், விவசாயம், தேயிலை, இறப்பர், பழங்கள், ஏற்றுமதி பொருட்கள் என அனைத்தையும் நாடு இன்று இழந்துள்ளது. இவை அனைத்துக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் சஜித் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மின்சார விநியோகம் பல பகுதிகளில் தடைப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார பிரச்சினைகளும் தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், விவசாய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பதுடன், கடன் மற்றும் வாகன காப்புறுதி போன்றவற்றை இரத்து செய்ய வேண்டும்.

குறிப்பாக, சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் சொத்துக்களை ஏலம் விடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, சுற்று நிருபங்களால் அந்த நிவாரணங்கள் தடைப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.

அதேபோன்று, அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் கறுப்பு சந்தை மாபியாக்கள் உருவாகியுள்ளனர் இதனால், உடனடியாக விலை நிர்ணயத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகள், அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை நிவாரணங்கள் மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.