போர் நிறுத்தச் சூழலைப் பயன்படுத்தி எரிபொருள், எரிவாயுக்களின் விலைகளைக் குறையுங்கள்! – சபையில் சஜித்

மத்திய கிழக்கில் நிலவும் தற்காலிகப் போர் நிறுத்தச் சூழலை ஒரு வாய்ப்பாகக் கருதி, எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்த இடைவெளியைப் பயன்படுத்தி, நாட்டின் அத்தியாவசிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தச் சூழலில் எரிபொருள், எரிவாயு, விவசாயத்துக்கான உரங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் ஆகியவற்றின் இறக்குமதியை முறைப்படுத்தி விலைகளைக் குறைக்க வேண்டும்.

மத்திய கிழக்கு பதற்றத்தைக் காரணம் காட்டியே முன்னர் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், தற்போது உலகளாவிய ரீதியில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும். எனவே, இன்று நள்ளிரவோ அல்லது நாளைய தினமோ எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

உர விநியோகம் தொடர்பாக ஜனாதிபதி சபையில் ஒரு நிலைப்பாட்டைக் கூறினாலும், கள யதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது. விவசாயிகள் இன்றும் உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயத்தில் அரசு வெறும் வார்த்தைகளால் இன்றிச் செயலில் காட்ட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த உலகளாவிய சூழலைப் பயன்படுத்தி நிவாரணம் வழங்குவது அரசின் பொறுப்பாகும்.” – என்றார்.