வரலாற்றில் இடம்பெற்ற அனர்த்தங்களின் போது கட்சி பேதமின்றி செயற்பட்டுள்ளோம். கடினமான நிபந்தனைகளை செயற்படுத்தும் அனுபவமும் எங்களுக்கு உள்ளது. தற்போதைய இக்கட்டான நிலையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது. எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமாயின் அதற்கான கோரிக்கையை விடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என சபை முதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாடு பேரனர்தத்திற்கு முகம்கொடுத்துள்ள இவ்வேளையில் நாடென்ற ரீதியில் சகல பேதங்களையும் புறம்தள்ளி மீண்டெழும் பலம் எமக்கு உள்ளது. எமக்கு பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமாயின் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து இப்போதுள்ளதை விடவும் சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என்பதனை ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியென்ற வகையில் நாங்கள் 1977 சூறாவளி தொடக்கம் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற அனர்த்தங்களின் போது கட்சி பேதமின்றி செயற்பட்டுள்ளோம். கஸ்டமான நிபந்தனைகளை செயற்படுத்தும் அனுபமும் உள்ளது. எதனையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தாத கலாச்சாரமும் உள்ளது. இவ்வேளையில் அனர்த்த நிலைமைகளின் போது வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு பொதுமக்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று அனர்த்த நிலை ஏற்பட்ட போதே ஜனாதிபதி பாராளுமன் ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடினார். 25ஆம் திகதியே அனர்த்த முகாமைத்துவ குழுவும் கூட்டப்பட்டது. பிரதேச ஒருங்கிணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழுவையும் கூட்டியிருந்தார். அத்துடன் தேசிய அனர்த்த முகாமைத்துவ குழுவும் கூட்டப்பட்டது. இதேவேளை எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார். இதன்போது அவசரகார சட்டத்தை அமுல்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி அவசாரகால சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவத்திற்காக மட்டுமே அது பயன்படுத்தப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும். முழுநாடும் சிகப்பு நிறத்தில் இருந்தாலும் சில பிரதேசங்களில் பாதிப்புகள் கிடையாது. நாங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்போம். வீதிகளை அமைக்க ஆரம்பிப்போம். நீர்வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதேபோன்று மத்திய மாகாணத்தில் கொத்மலையில் சிக்கியிருந்தவர்களை விமானங்கள் மூலம் மீட்டுள்ளோம். தவலந்தன்னவுக்கு இராணுவத்தினர் நடந்துசென்று அங்கு முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகள் எற்படுத்தப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி போன்ற மாவட்டங்களிலும் புத்தளம் முதல் முந்தல் வரையிலும் தொலைத்தொடர்பு தொடர்பான பிரச்சினை உள்ளது. மீட்கச் சென்ற விமானப்படை வீரர் ஒருவரும், கடற்படையை சேர்ந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர். நாயாறு பாலம் உடைந்துள்ளது. பாலத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெருப்பு இருக்கும் நேரத்திலேயே நீர் வீசி அதனை அணைக்க வேண்டும். தீயில்லாத நேரத்தில் நீரை வீசி பயணில்லை. இது நாட்டின் பிரச்சினையே. இது அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. முன்னரே தகவல்கள் கிடைத்ததா? தயாராகினோமா? என்பது தொடர்பில் பின்னர் கதைப்போம். பிரிந்திருந்து சத்தமிட்டுக்கொண்டிருக்க இது நேரமில்லை.
எதிர்க்கட்சியினருக்கு மீண்டும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமாயின் அதற்கான கோரிக்கையை விடுக்கவும் தயாராக இருக்கின்றோம். இந்த அனர்த்தத்தின் போது எவரையும் கைவிடாது அனைவரின் யோசனைகள் மற்றும் உதவிகளையும் பெற்றே நாங்கள் இதனை தீர்க்க முடியும். நாங்கள் நிச்சயமாக இதற்கு முகம்கொடுத்து மக்களை இதில் இருந்து மீட்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.





