தவெக. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தின் சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.
அந்த சம்பவத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை நடத்திய அவர், இந்த பொதுக்குழுவில் மீண்டும் தவெக பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்மூலம் மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்புப் படையை உருவாக்கி, அவர்களுக்கு இராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பயிற்சி சென்னையில் உள்ள செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் தலா 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், விஜய் சேலத்திலிருந்து டிசம்பர் 4 ஆம் திகதி முதல் பிரசாரத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளார். இதற்கிடையே, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்கு அமைய இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காகக் குறித்த கல்லூரி வளாகத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக தவெக தெரிவித்துள்ளது.
குறித்த மக்கள் சந்திப்பு முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பிற்கான திட்டத்தை தவெக தயாரித்துவிட்டதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தந்த மாவட்டங்களில் நலிவடைந்த பிரிவினரை மாவட்ட வாரியாக உள்ள அரங்குகளில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.





