தொடர்ந்தும் நோய்வாய்ப்படும் பசில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என்று மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்த போதிலும், இலங்கைக்குச் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் அவற்றை ரத்து செய்ததாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்றையதினம் தெரிவிக்கப்பட்டது.

பசில் ராஜபக்ச வேண்டுமென்றே நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதாக கடுமையான சந்தேகம் இருப்பதாக பிரதி பணிப்பாளர் நாயகம் லக்மினி கிரிஹகம நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், அவர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

மாத்தறையில் உள்ள பிரவுன்ஸ் ஹில்லில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கு சட்டவிரோதமாக ரூ. 50 மில்லியன் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்கில், பசில் ராஜபக்ச உட்பட நால்வர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் முதல் இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான போதிலும் பசில் ராஜபக்ச மற்றும் நான்காவது சந்தேகநபரான அயோமா கலப்பதி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து, பசில் ராஜபக்சவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனது கட்சிக்காரர் இடது பக்கம் மரத்துபோதல் (Left Side Sciatica) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமான பயணங்களுக்கு தகுதியற்றவர் எனவும் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்தார்.

இருப்பினும், முந்தைய மருத்துவ அறிக்கையில் கீழே வீழ்ந்ததால் கழுத்தில் காயம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தனர். ஆனால் எக்ஸ்ரே அறிக்கைகளில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என பிரதி பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்தோடு, 2025 செப்டெம்பர் 14 ஆம் திகதியிடப்பட்ட மருத்துவ பரிந்துரையின் படி, பசில் ராஜபக்ச 6 மாதங்களுக்கு விமான பயணத்தை தவிர்க்கவேண்டும் எனக் கூறப்பட்டபோதிலும், கடந்த நவம்பர் மாதம் 18 முதல் 21 ஆம் திகதி வரை பயணிக்க விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகவும், பின்னர் அவற்றை ரத்து செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ச உதவியுடன் விமானத்தில் பயணிக்க முடியும் எனவும் , சிறப்பு இருக்கை அல்லது ஓக்ஸிஜன் ஆதரவு தேவையில்லை என்றும் விமான நிறுவனத்தின் மருத்துவ அனுமதிப் படிவம் சுட்டிக்காட்டியதாகவும், இது மருத்துவ கூற்றுகளின் நம்பகத்தன்மை குறித்து கவலை எழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், பசில் ராஜபக்சவின் சட்டக்குழு விரிவான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதை நிறைவேற்றத் தவறினால், அவரது பிணையை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

அத்துடன் பசில் ராஜபக்சவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.