ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்தக் குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இன்று பிரதிவாதிகளிடம் கையளிக்கப்பட்டன.
குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் ஒவ்வொருவரையும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார்.
அத்துடன், பிரதிவாதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், பிரதிவாதிகளின் கைரேகை அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வழக்கின் முதற்கட்ட விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுடன், சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் ஏனைய பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ‘அரகலய’ வன்முறைகளின் போது, இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல, கிரியிப்பன்கெவ பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்திருந்தன.
குறித்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதற்கு முரணாக, இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் கடமையாற்றிய சில அரச அதிகாரிகளுக்குத் தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதிவாதிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், 8,850,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக ஊழல் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
