காஸா போர்நிறுத்தத்தை 497 முறை மீறிய இஸ்ரேல்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைமுறைக்கு வந்த காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல், 44 நாட்களில் குறைந்தது 497 முறை மீறியுள்ளதாக காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த மீறல்களால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் நடந்த தாக்குதல்களில், சுமார் 342 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களுமே அதிகமாக உள்ளனர் என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தீவிரமான மற்றும் திட்டமிட்ட போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என காஸா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்ட மனிதாபிமான நெறிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.” என சுட்டிக்காட்டியுள்ளது.

சனிக்கிழமை மட்டும் 27 மீறல்கள் இடம்பெற்றதாகவும், இதில் 24 பேர் பலியாகியதாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும் அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மீறல்களால் ஏற்படும் மனிதாபிமானமற்ற மற்றும் பாதுகாப்புப் பின்னடைவுகளுக்கு இஸ்ரேலே முழுப் பொறுப்பு என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.