ஈரான் போர் இழப்பு 270 பில்லியன் டொலர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் அடைந்துள்ள பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள் குறித்த முதற்கட்ட மதிப்பீடுகளை ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

ஈரான் அரசின் ஊடகப் பேச்சாளர் பாத்திமா மொஹஜெரானி, ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் பின்வரும் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போதுவரை ஏற்பட்டுள்ள சேதங்கள் சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது ஒரு ஆரம்பக்கட்ட மதிப்பீடு மட்டுமே என்றும், முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் ஏற்பட்டுள்ள இந்த இழப்புகளுக்கு உரிய நஷ்டஈட்டை பெறுவதில் ஈரான் உறுதியாக உள்ளது.

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளின் போதும், ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவினர் நஷ்டஈடு தொடர்பான விவகாரத்தை மிகத் தீவிரமாக முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலினால் ஏற்பட்ட நேரடிச் சேதங்கள் மற்றும் மறைமுகப் பொருளாதாரப் பாதிப்புகளைப் பல கட்டங்களாக ஆராய வேண்டியுள்ளதாக மொஹஜெரானி சுட்டிக்காட்டியுள்ளார்.